தூத்துக்குடி:தூத்துக்குடியில் புகழ் பெற்ற பழமையான வைகுண்டபதி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்காக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்கின. அதன்பின் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறாமல் இருந்தன.
இந்நிலையில், திருப்பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட திமுகச் செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருக்கு அறங்காவலர் குழு மற்றும் அறநிலையத்துறை கோயில் அர்ச்சகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, திருப்பணிகள் நடபெறுவது குறித்து அறங்காவலர் குழு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், திருப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது, “வைகுண்டபதி பெருமாள் கோயிலில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திருப்பணிகள் காலதாமதம் ஏற்பட்டு அப்படியே விடப்பட்டது. தற்போது, திமுக அரசு இந்த திருப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு சிறப்பாக நடத்தப்படும்.