‘வதந்தி பரப்புவோர் தொடர்ந்து வதந்திகளை பரப்பிக் கொண்டேதான் இருப்பார்கள்’ - அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி: ''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பொது மக்களுக்கு கிடைக்காது என வதந்தி பரப்புவோர், தொடர்ந்து வதந்திகளை பரப்பிக் கொண்டேதான் இருப்பார்கள், அந்த ஆயிரம் ரூபாயை பெரிதாக எண்ணுபவர்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும்'' என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் பெறும் முகாம் நடைபெற்று வருகிறது. இதனை இன்று (26.07.2024) அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார். தற்போது அதன் முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக வீடு, வீடாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு தேதி அறிவிக்கப்பட்டு முகாம்களுக்கு காலையில் 30 பேர், மாலையில் 30 பேர் என வரவழைத்து பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், ''மகளிரின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களுடைய உழைப்பிற்கும் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட உன்னதமான திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்.
இதற்கான முகாமில் 1,500 பேருக்கு 3 பேர் என்ற கணக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இப்பணிகள் நடந்துகொண்டிருப்பதால் இணைய சேவையின் வேகம் குறைவாக உள்ளது. அதன் காரணமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு குறைவாக உள்ளதையடுத்து, நேரடியாகப் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 308 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 600 இடங்களில் இது போன்ற முகாம்கள் நடைபெறுகிறது. இதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 999 குடும்ப அட்டைகளுக்கு கணக்குகள் எடுக்கப்படுகிறது.
நேற்று வரை 8,563 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. முகாம்களில் விண்ணப்பங்கள் நிரப்புவதற்கு உதவியாளர்கள் உள்ளார்கள். வரும் 4ம் தேதிக்குள் 80 சதவீதப் பணிகள் நிறைவு பெறும். பதிவு செய்வதில் தூத்துக்குடி மாவட்டம் 4ஆம் இடத்தில் உள்ளது.
பொது மக்களுக்கு இத்திட்டம் கிடைக்காது என வதந்தி பரப்புவோர், தொடர்ந்து வதந்திகளை பரப்பிக் கொண்டேதான் இருப்பார்கள். இதனை எதிர்க்கட்சிகள் பாராட்டமாட்டார்கள். ஆயிரம் ரூபாயை பெரிதாக எண்ணுபவர்களுக்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும்'' என அவர் கூறினார்.
இதையும் படிங்க: வறண்டு போகும் மேட்டூர் அணை.. டெல்டா விவசாயிகள் சோகம்... முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை?