தூத்துக்குடி: திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் (33). சங்கு குளிக்கும் தொழிலாளியான இவர் நேற்று (ஜூன்.16) காலை அப்பகுதியைச் சேர்ந்த சக மீனவ தொழிலாளர்கள் எட்டு பேருடன் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றுள்ளார்.
கடற்கரையில் இருந்து சுமார் எட்டு கடல் மைல் தொலைவில்ல் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, அமிர்தராஜூக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக மீனவ தொழிலாளர்கள் அவருக்கு படகில் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி கடலோர காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அமிர்தராஜ்க்கு, ஜெனிட்டா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். சங்கு குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது.