தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஜூலை 30ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் உற்பத்தி அலகில் இருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜன் தயார் செய்யப்பட்டு, கரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெறும் ஆக்ஸிஜன் உற்பத்தி பணிகள், அதன் பணி நிலவரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (ஜுன்.30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆக்ஸிஜன் உற்பத்தி கண்காணிப்புக் குழு தலைவரும், மாவட்ட ஆட்சியருமான செந்தில் ராஜ் தலைமை தாங்கினார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பிலிருந்து பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்கம் சார்பில் நிர்வாகி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட திரவ ஆக்ஸிஜன் அளவு, ஆக்ஸிஜன் வாயு உருளைகள் அனுப்பப்பட்ட விவரம் உள்ளிட்ட தகவல்கள் பரிமாறப்பட்டன. மேலும் ஆலை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு விளக்கம் தரப்பட்டது.
தொடர்ந்து, கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியை பாத்திமா பாபு, வணிகர் சங்க நிர்வாகி ராஜா ஆகியோர் பேசுகையில், ”கரோனா அச்சுறுத்தலை காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் அனுமதி வாங்கியது. தற்போது அங்கு ஆக்ஸிஜன் உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன.