கரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எழுந்த கோரிக்கையையடுத்து, கிழக்கு கடற்கரைப் பகுதியில் 61 நாள் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலத்தை, 47 நாட்களாக மத்திய அரசு குறைத்தது. இதன் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 240 பதிவுசெய்யப்பட்ட விசைப்படகுகளில் 120 விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. இன்று செல்லும் விசைப்படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும், எஞ்சியுள்ள விசைப்படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களும் என சுழற்சி முறையில் செல்ல வேண்டும் என மீன்வளத்துறை சார்பில் நடைபெற்றக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல டோக்கன் பெற்றுக்கொண்ட மீனவர்கள் மட்டும், மீன்பிடித் துறைமுகத்துக்குள் அனுமதி பெற்று நுழைந்தனர். அவர்களுக்கு சானிடைசர் அளிக்கப்பட்டு, உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது.
இன்று மாலை நடைபெறும் மீன் ஏலத்திலும் வியாபாரிகள், மீனவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது,