பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தான் நாங்கள் பார்க்கின்றோம் தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகர, மதிமுக செயலாளர் முருகபூபதி மகன் திருமணம் இன்று (அக்.27) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மணமக்களுக்கு தன் கையால் தாலி எடுத்து கொடுத்து வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஆளுநர் மாளிகைக்கு முன் நடந்த சம்பவத்திற்கு கண்டிப்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுப்பார்கள். சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் காவல்துறையைப் பொறுத்த அளவிற்கு, இந்த சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. இது முன்னுதாரணமாக இந்த நடவடிக்கை இருக்கும் என்பது எங்கள் நிலைப்பாடு.
மத ரீதியாக, சாதி ரீதியாக தேவையில்லாத ஒரு சர்ச்சைகளை பாஜக கிளப்புகிறது. குறிப்பாக, இளைஞர்களை பொறுத்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொள்கிறார். சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்பதை சொல்லியிருக்கிறார். மருது பாண்டியர் நினைவு நாள் அன்றைக்கு அமைச்சர்கள் ஐந்து பேர் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். மருது சகோதரர்களுக்கு சிலை எழுப்பி இருக்கிறார்கள்.
நாட்டிற்காக உழைத்த விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதையை இந்த அரசு செய்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஆளுநர் இப்படி கூறி இருக்கிறார். சங்கரய்யா 102 வயது வரை இருந்தார். வெள்ளையனை வெளியேற்ற 9 வருடம் சிறையில் இருந்து இருக்கிறார். அதனால் அவருக்கு கல்வி கிடையாது, கல்லூரிக்கு போக முடியவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரையாவிற்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக முடிவு செய்து இருக்கிறார்கள். ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார், ஆளுநர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களான கேரளா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் மாநில அரசுக்கு இடையூறு செய்கிற மாதிரி திட்டங்களை செயல்படுத்த முடியாத மாதிரி நடந்து கொள்கிறார்கள்.
சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றிய பின் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், நிறைவேற்ற முடியவில்லை. இதன் பின்னணியில் மத்திய அரசுதான் உள்ளது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி, அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக இந்தியா கூட்டணி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதற்கு முன்னுதாரணமாக 5 மாநிலத் தேர்தல் ரிசல்ட் கண்டிப்பாக இருக்கும். வடநாட்டில் பாரத், தமிழ்நாட்டில் இந்தியா என்று சொல்கிறோம். இது தேர்தலுக்காக மத்திய அரசு திசை திருப்புகிறது. 45 வரடத்தில் இல்லாத பணவீக்கம், பொருட்கள் விலை ஏற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆரியத்தை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். அண்ணாமலை கூறுவதுபோல் சொன்னால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைதான் குப்பையில் போட வேண்டும். ஏனென்றால், ஆரிய சர்ச்சையைக் கொண்டு வந்தது இவர்கள்தான். ஆயிரம் வருடத்திற்கு முன்னரே திராவிடம் வந்து விட்டது. தமிழ் மொழி பேசுபவர்கள், தென்னிந்தியாவில் வாழ்கிறவர்கள், திராவிடர்கள்.
மதிமுகவைப் பொறுத்த அளவிற்க்கு, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். முதலமைச்சர் கூறியது போல் யார் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல, யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் கிடையாது. கட்சி தலைமை தொண்டர்கள் முடிவுதான் என் முடிவு.
அண்ணாமலை சிறந்த ஒரு காவல்துறை அதிகாரி. அவரின் உழைப்பை நான் பாராட்டுகிறேன். தவறான சித்தாந்தத்திற்காக தவறாக உழைப்பைச் செலுத்துகிறார். ஐபிஎஸ் அதிகாரியான அவர், அரசியலில் வருவதற்கு நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் அண்ணாமலை மதவாத இயக்கத்தில் தலைவராக வந்தது, மிகப்பெரிய ஏமாற்றம். மேலும், அவருடைய செயல்பாடுகளைப் பொறுத்தளவிற்கு, சராசரி அரசியல்வாதியாகத்தான் பேசுகிறார்” என்று கூறினார்.
இதையும் படிங்க:ஆளுநர் மாளிகையில் குண்டு வெடித்ததாக கூறுவதில் உண்மையில்லை - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்