தூத்துக்குடி:மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோவின் மகன் துரை வையாபுரி நேற்று (ஜூலை 09) கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக எனது நண்பரும் தொழிலதிபருமான ஆதிமூலம் என்பவருடன் கலந்துரையாடினேன்.
அப்போது அவர் தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். ஆனால், சாத்தூர் தொகுதிக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியில் தொழில் தொடங்குவதற்கு அனுமதி கிடைத்தால் சிறப்புற இருக்குமென விருப்பம் தெரிவித்தார்.
தொழிற்சாலை அமைக்க திட்டம்:
அதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் இது குறித்து பேசினேன்.
உடனடியாக அவர்களும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக புதிய தொழிற்சாலைகளை அமைக்க யாரேனும் முன்வருவார்கள் எனில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை நிச்சயம் செய்து கொடுப்போம் என உறுதியளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ளாடைகள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க திட்டம் வகுத்துள்ளோம். விளாத்திகுளம் தொகுதி வளர்ச்சியில் மிக பின்தங்கிய தொகுதி.
இங்கும் நெடுங்காலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. ஆகவே விளாத்திகுளம் தொகுதியில் உள்ளாடைகள் தயாரிப்பு தொழிற்சாலை ஆரம்பிப்பதன் மூலம் முதற்கட்டமாக 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர முடியும்.
இந்தப் பணியிடங்கள் விரிவுபடுத்தப்பட்டு குறைந்தது ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாம்.
நச்சு ஆலைகள் அகற்றப்பட வேண்டும்:
மேலும் கோயம்புத்தூர் உள்பட வட மாவட்டங்களில் தொழிற்சாலைகள் ஆரம்பித்தாலும் அங்கு உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு தூத்துக்குடி தான் வர வேண்டியுள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்திலேயே தொழிற்சாலையை ஆரம்பிப்பதன் மூலம் போக்குவரத்துக்கு ஆகும் செலவும் குறைகிறது. மேலும் துறைமுகமும் மிக அருகாமையிலேயே இருப்பதனால் தேவையான மூலப்பொருள்களை எளிதில் கொண்டு சேர்க்கவும் முடியும்.
செய்தியாளர்களைச் சந்தித்த துரை வையாபுரி இந்த மண்ணிலிருந்து நச்சு ஆலைகள் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் மதிமுக கொள்கை. எனவே சுற்றுச்சூழலுக்கு மாசற்ற உள்ளாடைகள் தயாரிப்பு தொழிற்சாலையை கொண்டு வருவதிலும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் வேலை வாய்ப்புக்கும் நல்லதொரு முன்னேற்றமாக இருக்கும்.
அதற்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும். இதைப்பார்த்து பின்னாளில் மேலும் பல தொழிற்சாலைகள் இங்கு வர வாய்ப்புள்ளது” என்றார்.
இதையும் படிங்க: புதிய அத்தியாயத்தை இணைத்த திமுக ஆட்சி - கி. வீரமணி அறிக்கை