தூத்துக்குடி: குமரிக் கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (நவ.22) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், புதன்கிழமை காலை முதல் வியாழன் அதிகாலை வரை அதிகபட்சமாக திருச்செந்தூர் பகுதியில் 88 மில்லி மீட்டர் மழையும், கழுகுமலை பகுதியில் 87 மில்லி மீட்டர் மழையும், காயல்பட்டிணம் பகுதியில் 103 மில்லி மீட்டர் மழையும், விளாத்திக்குளம் பகுதியில் 83 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடியில் 30.30 மில்லி மீட்டர் என சராசரியாக மாவட்டம் முழுவதும் 44.53 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மேலும், தூத்துக்குடி நகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோடு, ரயில்வே நிலையம் செல்லும் சாலை, ரயில்வே தண்டவாளம், வஉசி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீரானது சாலை ஓரங்களில் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார்.