தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எப்போதும்வென்றான் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு மொபைல் போன் மூலம் பான் மசாலா விற்பனை செய்யப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் பைக்கில் சந்தேகப்படும்படியாக வந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவர் மொபைல் போன் மூலம் பான் மசாலா பொருள்களைக் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது .
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிவஞானபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறினார்.
உடனே காவல் துறையினர் அறிவழகன் வீட்டிற்குச் சென்று சோதனை செய்த போது, அங்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ பான் மசாலா இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றைப் பறிமுதல் செய்து, பான் மசாலா விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், "பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட வந்த 75 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 8 பேரைக் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்துள்ளோம்" எனக் கூறினார்.