தூத்துக்குடி:இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு துறைமுக அதிகாரிகளுடன் தூத்துக்குடி தோணி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக, விரைவில் மாலத்தீவுக்கு தூத்துக்குடியில் இருந்து வரும் தோணிகளுக்கு பல்வேறு கட்டணச் சலுகைகள் அளிக்கப்படுவதாக மாலத்தீவு துறைமுக தலைமை செயல் அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து பல ஆண்டுகளாக மாலத்தீவு, அந்தமான், லட்சத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தோணி படகு மூலம் காய்கறிகள், உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் அனுப்பபட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து 17 தோணி படகு மூலம் மாலத்தீவு மற்றும் மாலத்தீவை சுற்றியுள்ள தீவுகளுக்கும், சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மாலத்தீவு துறைமுகத்தில் (Maldives Ports) சரக்குகள் இறக்குவதற்கான கட்டணம் அதிக அளவு இருப்பதால் தூத்துக்குடி தோணி படகு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தூத்துக்குடி தோணி படகு உரிமையாளர் சங்கத்தினர் மாலத்தீவு சென்று அந்நாட்டு துறைமுக அதிகாரிகளுடன் பல்வேறு சலுகைகள் அளிக்க கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் மாலைத்தீவு துறைமுக தலைமை செயல் அதிகாரி சாகித் அலி தலைமையிலான குழுவினருடன், தூத்துக்குடி தோணி படகு உரிமையாளர் சங்கத் தலைவர் மெக்கண்ணா தலைமையிலான தோணி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.