தூத்துக்குடி: விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீலமுடிமண் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்னும் நிகழ்ச்சி நேற்று (ஆக. 5) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு திட்டத்தினை தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து வீடுகளுக்குச் சென்று நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், "இந்தப் பகுதியில் 5,288 குடும்பங்கள் பயன்பெரும். வயதானவர்களை வீட்டிலேயே இருக்கச் செய்வதன் மூலம் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பேரன் பேத்திகளுடன் விளையாட முடியவில்லை என வேதனைப்படுகின்றனர்.
முதியோர்களைக் கவனிக்க முடியாததால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
முதியோர்களுக்கான சேவை என்பது அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. படுத்தபடுக்கையாக உள்ள முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்காக கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என முதலமைச்சர் கூறி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:திமுக அரசுக்கு மக்களே அரண் - அமைச்சர் செந்தில் பாலாஜி