தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கழுகுமலை, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு உள்ளனர். இதில் மக்காச்சோளப் பயிர் நன்றாக வளர்ந்து வந்த சூழலில் கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய முன்தினம் (நவ.22) இரவு முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது.
இந்த காற்று மற்றும் கனமழையின் காரணமாக, கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர் வேரோடு நிலத்தில் சாய்ந்து, முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கண் கலங்கி நிற்கும் மக்காச்சோள விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.
இது குறித்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வரும் பட்டதாரி இளைஞர் ஒருவர் கூறும்போது, "நான் பார்த்து வந்த இன்ஜினியரிங் வேலையை விட்டு விட்டு, கடந்த மூன்று வருடங்களாக இந்த விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக சரிவர விளைச்சல் இல்லாத காரணத்தினாலும், அதிகாரிகள் பயிர் இழப்பீடு தொடர்பாக அரசுக்கு உரிய அறிக்கையைத் தாக்கல் செய்யாத காரணத்தினாலும், எங்களால் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியவில்லை.