தூத்துக்குடி:உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்ததாக குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு தசரா திருவிழா, கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினமும் இரவு அம்மன் வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவற்றில் மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி காளி, அம்மன், ராஜா, ராணி, குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் வீடு, வீடாகச் சென்று பெற்ற காணிக்கையை கோயில் உண்டியலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.