தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்ஃபோன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் தாமதமாக கடையடைத்த காரணத்திற்காக காவல் துறையினர் கைது செய்த நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்தனர்.
தற்போது இறந்தவர்களின் உடல்கள் திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இருவரது மரணத்திலும் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று மருத்துவர்கள் வீடியோ பதிவுடன் நீதிபதி முன்னிலையில் உடற்கூறாய்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார். அதேபோல், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, அவரது மகள்களும் வந்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை உடற்கூறு ஆய்வு நடத்த அனுமதியளிக்க மாட்டோம் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பின்பு உடற்கூறாய்வுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. இருப்பினும் கோரிக்கையை நிறைவேற்றும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் வீட்டிற்குச் சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.