தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள உழக்குடியில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் காணப்படுவதாகவும், அதை முறையாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஆறுமுக மாசான சுடலை கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை அருகில் உழக்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நினைவுச் சின்னங்கள், கல் வட்டங்கள், இரும்பு உருக்கும் பட்டறைகள் உள்பட ஏராளமான தொன்மை வாய்ந்த பொருள்கள் இருக்கிறது. மேலும், உலக்குடி கிராமத்தில், கி.மு.1000 முதல் கி.மு 300 வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசர்கள் மற்றும் தலைவர்களை அடக்கம் செய்வதற்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களும் அங்கு உள்ளன.
எனவே இங்கு தொல்லியல் ஆராய்ச்சியை நடத்தினால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெறும் என்று கூறியிருந்தார். இதனை கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் ஏற்கனவே ஆராய்ச்சி செய்ததில், அந்த பகுதி முழுவதும் கடுமையாக சேதம் அடைந்து கிடைக்கிறது. எனவே அங்கு அகழாய்வு நடத்துவதால் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தார்.