தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக மகேந்திரன் என்வரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
வழக்கு விசாரணை தாமதம்
இந்த விசாரணையின்போது காவல் துறையினர் மகேந்திரனை தாக்கியதில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது தாயார் வடிவம்மாள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த மனுவின் அடிப்படையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க தூத்துக்குடி சரக சிபிசிஐடி காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குற்ற வழக்குகள் தொடர்பாகவும் தூத்துக்குடி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வருவதால் சாத்தான்குளம் மகேந்திரன் வழக்கு விசாரணை தாமதமானதாக தெரிகிறது.
மதுரை சிபிசிஐடிக்கு மாற்றம்
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை முரளி, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளார்.
இன்று மகேந்திரனின் தாயார் வடிவம்மாள், சகோதரி சந்தனமாரி உள்ளிட்டோரிடம் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து காவல் துணை கண்காணிப்பாளர் முரளி விசாரணை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்குரைஞர் ஜெயச்சந்திரன்,
வழக்குரைஞர் ஜெயச்சந்திரன் பேட்டி 'ரகு கணேஷ் தண்டிக்கப்பட வேண்டும்'
"மகேந்திரன் கொலை வழக்கு தொடர்பாக மதுரை சிபிசிஐடி காவல் துறையினர் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
மகேந்திரனை அடித்து துன்புறுத்திய சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஒன்றிய அரசு" என கூறுவதற்கு தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம் அதிரடி