தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, பரம்பு, ஆதிச்சநல்லூர், திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.
தொல்லியல் சின்னங்கள் அருகே உள்ள மணல், கல் குவாரிகளுக்கு தடை! - கல் குவாரி
தூத்துக்குடி: தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களின் அருகே அமைந்துள்ள மணல்குவாரி, கல்குவாரி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, சில பகுதிகளில் குடியிருப்புக்களும், விளைநிலங்களும் இருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடங்காட்டி கருவியை (ஜிபிஎஸ்) பயன்படுத்தி பூமியின் அடிபரப்பில் தொல்லியல் பொருட்கள் உள்ளதா என ஏன் கண்டறிய கூடாது? என கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை, அறிவிக்கப்பட உள்ளவை, அகழ்வாராய்ச்சி நடைபெறவுள்ள இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மணல், கல் குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கக்கூடாது எனவும், தொல்லியல் துறை சார்பில் அப்பகுதிகளில் தகவல் பலகை வைக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.