5 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் தரும் இயந்திரம் கல்லூரி மாணவர்களால் கண்டுபிடிப்பு!! தூத்துக்குடி: தூய மரியன்னை கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியை, கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், கல்லூரி செயலாளர் ஷிபானா சுயநிதி, பிரிவு இயக்குனர் ஜோஸ்வின் ஜெயராணி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் பாண்டி, நட்சத்திரக் கல்லூரி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இதில், மதுரை, தூத்துக்குடி நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், கலந்துகொண்ட மாணவ மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த போட்டியில் கலந்துகொண்ட மதுரை காமராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் கண்டுபிடிப்பாக ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டால் உடனடியாக சானிட்டரி நாப்கின் வெளியே வரும் இயந்திரத்தை காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதே போன்று தானியங்கி இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு உதவியாக வரப்புகளை வெட்டும் இயந்திரம், முந்திரி பருப்புகளை ரகம் வாரியாக பிரிக்கும் இயந்திரம், வைஃபை பயன்படுத்தி மோட்டார் வாகனம் இயக்குவது, காடுகளில் தீப்பற்றினால் சென்சார் மூலம் கண்டறிந்து அதை முதற்கட்டத்திலேயே அணைக்கும் இயந்திரம், வீடியோ கேம்களை செல்போனில் கைகளை தொடாமல் விளையாடுவது குறித்த மாடல் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இந்த கண்டுபிடிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: அதெப்புடி திமிங்கலம்.. ஏடிஎம்மில் ரூ.200 பதில் ரூ.20 வந்ததால் வாடிக்கையாளர் ஷாக்..