தூத்துக்குடி: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ஆம் தேதி உலக வெறி நாய்க்கடி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக வெறிநாய் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஒருங்கிணைந்த காசநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை மையம் தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ”இன்று (செப்.28) உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த மாதம் காசநோய்க்கான சிகிச்சை ஒருங்கிணைந்த பரிசோதனை என்ற வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடத்தப்பட்டது. அந்த வகையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் பரிசோதனை மையம் தொடங்கி வைக்கின்றோம்.
வெறி நாய் கடிப்பில் மட்டும் ரேபிஸ் நோய் வருகிறது என்று இல்லாமல் நாம் செல்லமாக வளர்க்கும் ஆடு, மாடு, குதிரை, ஓநாய் போன்ற பிற விலங்குகள் மூலமும் ரேபிஸ் வருகிறது. அதனால் பொதுவாக வெறிநாய் கடி என்று சொல்கிறோம். நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்புக்கு உள்ளானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
நாய் கடித்தவுடன் முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 28வது நாள் என நான்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நான்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 100 சதவீதம் நோய் பாதிப்பு ஏற்படாது. வீடுகளில் வளர்க்கப்படுகின்ற நாய்களுக்கும் எந்தெந்த நாட்களில் ஊசி போட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் கூறப்பட்டுள்ளது