தூத்துக்குடி: தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கு சொந்தமாக இழுவை வலை விசைப்படகு உள்ளது. இந்த படகின் மதிப்பு ரூ. 80லட்சம் ஆகும். இந்த படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த 1ஆம் தேதி தருவையை சேர்ந்த வினி என்ற மீனவர் தலைமையில் ஆழ் கடலுக்கு சுமார் 11 மீனவர்களுடன் கடலுக்குள் சென்றுள்ளனர்.
நேற்று மீன் பிடித்து விட்டு நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடல் பகுதியில் கரையில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடலில் இருந்த பாறையில் பயங்கரமாக மோதியது. இதில் விசைப்படகின் அடிப்பகுதி சேதமடைந்து என்ஜின் இருக்கும் பகுதியில் கடல் நீர் புகுந்துள்ளது.
நடுக்கடலில் படகு விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள் இதனால் விசைப்படகில் இருந்த மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இடிந்தகரை மீனவர்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து விரைந்து வந்து விசைப்படகில் இருந்த 11 மீனவர்களை மீட்டனர். அதற்குள் விசைப்படகு 95 சதவீதம் கடலுக்குள் மூழ்கி விட்டது. அதில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.
இதே போல் அவர்களுக்கு சொந்தமான ஏராளமான வலைகளும் கடலில் மூழ்கியது. தற்போது 95 சதவீதம் கடலில் மூழ்கியுள்ள விசைப்படகை மீட்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து இழுவை விசைப்படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மூழ்கிய விசைப்படகை மீட்க தேவையான நடவடிக்கைகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பு சம்பவம்: 5 பேர் மீது உபா பிரிவின்கீழ் வழக்குப்பதிவு - காவல் ஆணையர் பேட்டி