தூத்துக்குடி: உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து 30 கொண்ட குழுவினர் தென் தமிழகத்திற்கு ரயிலில் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்து அங்கு பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த பிறகு அங்கிருந்து இரண்டு தனியார் வேனை வாடகைக்கு எடுத்து தூத்துக்குடி வழியாகக் கன்னியாகுமரிக்கு செல்வதற்காக நேற்று (டிச.30) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று (டிச.31) அதிகாலை தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சென்ற போது கீழ வல்லநாடு துணை மின் நிலையம் அருகே எதிரே தவறான பாதையில் வந்த டிப்பர் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வேன் மீது மோதியதில் வேன் அருகில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி அளவில் விபத்து நடைபெற்றதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. எனவே பின்னால் மற்றொரு வேனில் வந்த நபர்கள் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியாமல் பரிதவித்துள்ளனர்.
சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீசார் சம்பவ விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டனர். அப்போது வேனில் இருந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் சாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் சுமன், பார்வதி ஆகிய இரண்டு பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.