திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(42). இவர் அரசு பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நெல்லை, திசையன்விளை பகுதியில் செல்போன் விற்பனை கடை உள்ளது. இந்தக் கடையில் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், மதுப்பாட்டில்களை சட்டவிரோதமாக அரசுப் பேருந்தில் கடத்தி வருவதாகவும் தூத்துக்குடி மாவட்ட மது ஒழிப்பு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மதுஒழிப்பு அலுவலர்கள் மீகா தலைமையில், உதவி ஆய்வாளர் ஜோசப், தலைமைக் காவலர் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜெயக்குமாரை கையும், களவுமாக பிடிக்கத் திட்டமிட்டனர்.
அதன்படி இன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து தூத்துக்குடி, திசையன்விளை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் ஜெயக்குமார் மதுப்பாட்டில்களை கடத்தி வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வந்த அரசுப் பேருந்தில் மதுவிலக்கு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.