தூத்துக்குடி: முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் (VAO) பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் 25 அன்று மர்ம நபர்களால் அவரது அலுவலகத்தில் வைத்தே சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த முறப்பநாடு போலீசார், கலியாவூர் வேதகோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராம சுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை கைது செய்தனர்.
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையில் புகார் அளித்ததால் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், வழக்கு எண் 449 கடுமையான ஆயுதங்களுடன் அத்து மீறி நுழைதல், 302 கொலை, 506 ஆயுதங்களுடன் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 52 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு, 31 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள், இரும்பு ராடு உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டாவது நபர் மாரிமுத்து என்பவர் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும், தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை எனவும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் மாரிமுத்துவின் மனுவை தள்ளுபடி செய்தார்.