தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Transgenders Protest: 'சாப்பிடக் கூட வழியில்லாத நிலை' - தூத்துக்குடியில் திருநங்கைகள் முற்றுகை

ஒரு சில திருநங்கைகள் செய்யும் தவறால் சமுதாயத்தில் உள்ள ஒட்டுமொத்த திருநங்கைகளும் துயரடைவதாகவும், வாழ்வாதாரத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிடுமாறும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் புகார் மனு அளித்தனர்.

Transgenders Protest
Transgenders Protest

By

Published : Jan 9, 2023, 6:39 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை...

தூத்துக்குடி:திருநங்கைகள் மீது நடத்தப்படும் சமுதாய கொடுமைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டனர். திருநங்கைகளின் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அடுத்த தமிழ் சாலைப் பகுதியில் சில திருநங்கைகள் அந்த வழியாக சென்றவர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது சம்பந்தமாக, நான்கு திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தெருக்களில் நடந்து செல்லக் கூட திருநங்கைகளுக்கு பிரச்னையாக இருப்பதாகவும், அப்படி நடமாடும் திருநங்கைகள் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் திருநங்கைகளை, வீட்டை காலி செய்யக் கோரி வீட்டின் உரிமையாளர்களால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. திருநங்கைகளின் வாழ்வாதார முன்னேற்றம் குறித்து அமைச்சர், எம்.பி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக சாப்பிடக் கூட வழியில்லாத நிலையில் வாழ்ந்து வருவதாகவும், ஒருசிலர் செய்யும் தவறால் சமூகத்தில் இருக்கும் மற்ற திருநங்கைகள் கடும் துயரடைவதாகவும் தெரிவித்தனர். ஆகவே, எங்களையும் வாழ விடுங்கள், வழியை விடுங்கள், சமுதாயத்தில் நாங்களும் மனிதர்கள் தான், எங்களை காட்சிப் பொருளாக மாற்றி விடாதீர்கள் என திருநங்கைகள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழுக்கு மணிமகுடம்; தமிழ்நாட்டில் மற்றொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details