தூத்துக்குடி:மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் 'தசரா திருவிழா' மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அக்.24ஆம் தேதி நள்ளிரவு 'சூரசம்ஹாரம்' நடைபெற உள்ளது. இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து காப்பு கட்டி 61, 41, 21, 11 ஆகிய நாட்கள் சூழ்நிலைக்கு தகுந்தது போல் விரதம் மேற்கொள்வர்.
மேலும், விரதம் இருந்து தங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டி சிவன், பார்வதி, முருகன், வள்ளி, பிள்ளையார், காளி, அட்டகாளி, கருங்காலி, சுடுகாட்டு காளி உள்ளிட்ட பல்வேறு தெய்வ வேடங்களும்; குறவன், குறத்தி உள்ளிட்ட வேடங்களும் அதுமட்டுமின்றி விலங்குகள் போலவும் வேடமணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்வர். இந்த நிலையில், வேடமணியும் பக்தர்களுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் அருகே உள்ள சுனாமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காளி வேடமிடுபவர்கள் தலையில் அணிவிக்கக்கூடிய கிரீடம், அலுமினிய தகடு மூலம் கையினால் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிரீடங்களுக்கு வண்ணங்கள் தீட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காளி வேடம் அணிபவர்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு தெய்வ வேடம் அணிபவர்களுக்கும் இங்கு கிரீடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கிரீடங்கள் 2,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி வேடமணியும் பக்தர்களுக்கு பல வண்ண நிறங்களில் தேவைக்கு ஏற்றபடி ஆடைகள் தயாரித்து கொடுக்கப்பட்டு வருகிறது. குரங்கு, கரடி, சிங்கம், புலி, ராஜா, ராணி வேடமணியும், பக்தர்கள் தேவைக்கு ஏற்றவாறு ஆடைகள் அளவு எடுத்து தைத்துக் கொடுப்படுகிறது.