தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்காண ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. இதில் வாழைக்காய் மற்றும் வாழை இலைகள், தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும்.
இந்த ஆண்டு பருவமழை பெய்யாத காரணமாக, வாழை விவசாயத்திற்கு தேவையான நீர் இல்லாத காரணத்தால் சரியான விளைச்சல் இல்லாமல் காணப்படுகிறது. ஆகவே, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருவிழா (Kulasekharapatnam Muttharaman Dussehra festival) ஆகிய பண்டிகையை முன்னிட்டு வாழைதார் மற்றும் வாழை இலைகள் இருமடங்கு அதிகரித்துள்ளன.
நாட்டுப் பழ வாழைத்தார் ரூ.900 முதல் ஆயிரம் ரூபாய் வரையும், கற்பூரவள்ளித்தார் ரூ.650 முதல் ரூ.700 வரையும் விற்பனையாகிறது. சக்கை வாழைத்தார் ரூ.900-க்கு விற்பனை ஆகிறது. வாழை இலையை பொருத்தவரை, சிறிய கட்டு ரூ.700-க்கு விற்பனையான நிலையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்காக சிறிய இலையை பொதுமக்கள் வாங்கி செல்வதால் சிறிய கட்டு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், எதிர்பார்த்த விலையை விட அதிக விலைக்கு போவதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.