தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குலசை தசரா: போதிய பஸ் இல்லாமல் 11 கி.மீ. நடந்த மக்கள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் போதிய பேருந்து வசதி இல்லாததால், குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை 11 கிலோ மீட்டர் தூரம், தங்களின் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் நடந்து சென்ற சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குலசேகரன் பட்டினம் தசரா திருவிழாவில் போதிய பேருந்து வசதி இல்லாததால் 11 கிமீ நடந்தே சென்ற மக்கள்
குலசேகரன் பட்டினம் தசரா திருவிழாவில் போதிய பேருந்து வசதி இல்லாததால் 11 கிமீ நடந்தே சென்ற மக்கள்

By

Published : Oct 7, 2022, 9:44 PM IST

Updated : Oct 7, 2022, 10:06 PM IST

தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தான் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, இந்த தசரா திருவிழா இங்கு ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா, கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக்டோபர் 5ஆம் தேதி நள்ளிரவு நடந்தது. இந்த மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியினை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வேடமணிந்து வந்த பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இந்த மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் பக்தர்கள் தங்கள் சொந்த ஊருக்குத்திரும்புவதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கடுமையாக அவதி
அடைந்தனர்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் போதிய பேருந்து வசதி இல்லாமல் 11 கி.மீ. நடந்தே சென்ற மக்கள்

சிறப்புப்பேருந்துகளில் இடைப்பட்ட தூரத்தில் உள்ள ஊர்களில் நிறுத்தப்படாது என அரசுப்பேருந்து ஓட்டுனர், நடத்துநர்கள் தெரிவித்ததால் பக்தர்கள் வேறு வழியின்றி குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை 11 கிலோ மீட்டர் தூரம் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் ஆபத்தான சூழலில் நடந்தே வந்தனர்.

மேலும், இரவு பேருந்துகள் கிடைக்காததால் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் தரையில் படுத்து உறங்கும் அவல நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. மேலும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளில், அதிக கட்டணம் வசூல் செய்ததால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்தனர்.

ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய இதுபோன்ற திருவிழாக்களில், அரசு கூடுதல் கவனம் செலுத்தி, பக்தர்களின் தேவையை முழுமையாகப்பூர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்

Last Updated : Oct 7, 2022, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details