தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்படும் நேஷனல் பொறியியல் கல்லூரியில் (தனியார்) கடந்த ஆண்டு படிப்பை முடித்த முன்னாள் பொறியியல் மாணவர் ராஜகுமார் என்பவர் புதியதாக விதை விதைப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
இன்று கல்லூரி வளாகத்தில் விவசாயிகளுக்கான விதை விதைப்பு இயந்திரத்தை சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அந்த வட்டார விவசாயிகள் கலந்துகொண்டு இயந்திரங்களைப் பார்வையிட்டனர். முதலாவதாக 25 இயந்திரங்கள் விற்பனைக்கு வழங்குவதற்குத் தயாரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் ராஜகுமார் கூறுகையில்,"இந்த விதை விதைப்பு இயந்திரத்தை விவசாயிகள் டிராக்டரில் பொருத்தி சிறிய, பெரிய அளவிலான விவசாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். சோளம், பருத்தி, சூரியகாந்தி, உளுந்து, பாசிப்பயிறு விதைகளைத் தேவையான அளவில் தேவையான இடைவெளிவிட்டு துல்லியமாக விதைகளை விதைக்கலாம். இந்த உபகரணத்தின் மூலமாக ஒரு விவசாயி நாளொன்றிற்கு 20 ஏக்கர் நிலத்தில் விதை விதைப்பு செய்ய முடியும். விவசாயத்தின் செயல்திறனை அதிகரிக்க முடியும், உழவுப் பணியின்போது மனித வேலையை எளிமைப்படுத்தி அதிக அளவில் விதை விதைப்பு செய்துகொள்ள ஏதுவாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.