தூத்துக்குடி:விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உமையலிங்கம் (34) - மனிஷா தம்பதி வசித்து வருகின்றனர். உமையலிங்கம், கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் தென்றல் நகரில் உள்ள சாய்லிங்கா கோயிலில் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் (பிப்.4) இரவு 9 மணிக்கு, கோயிலில் இரவு பூஜையை முடித்து விட்டு உமையலிங்கமும், அவரது நண்பர் கோமதிராஜூம் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பின் தொடர்ந்தவாறு பைக்கில் வந்த 2 பேர், பூசாரி உமையலிங்கத்தை வழி மறித்தனர். அந்த நேரத்தில் அங்கு கார் ஒன்றில் 5 பேரும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து இருவரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். அதன்பின் உமையலிங்கத்தின் கை, கால்களை கட்டிய காரின் பின் இருக்கையில் கிடத்தி கடத்திச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோமதிராஜ்உமையலிங்கத்தின் மனைவி மனிஷாவிடம் தகவல் அளித்துள்ளார். அதனடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மனிஷா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிகண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர், பூசாரி கடத்தப்பட்ட பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது கடத்தப்பட்ட காரின் எண் தெரிய வந்ததை அடுத்து, அந்த கார் சாத்தூர் அருகே நிற்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே உமையலிங்கத்தின் மனைவிக்கு போன் செய்த மர்ம நபர்கள், 10 லட்சம் ரூபாய் தந்தால் உமையலிங்கத்தை விடுவிப்பதாக மிரட்டி உள்ளனர்.