தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் காவல் சோதனைச் சாவடியில், கடந்த 16 ஆம் தேதி அதிகாலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா உள்ளிட்ட காவல்துறையினர் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில், காரில் 9 எம்.எம். ரக கள்ளத்துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள், இரண்டு அரிவாள்கள் இருந்தன. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், காரில் இருந்த திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் மேலக்கரையைச் சேர்ந்த குமுளி ராஜ்குமார் (37), பாளையங்கோட்டை படப்பைகுறிச்சி காந்தி தெருவைச் சேர்ந்த வினோத் (26), திருநெல்வேலி கொக்கிரகுளம் மேலநத்தத்தைச் சேர்ந்த சுரேந்தர் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.