தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்து வரும் தொடர் மழையினால் தூத்துக்குடி மாநகரை ஒட்டி உள்ள பெரிய குளமான கோரம்பள்ளம், உப்பாத்து ஓடை ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீரானது வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஏற்கனவே தொடர்ந்து பெய்து வரும் மழையால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் குளங்களில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிகளவிலான வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. ஆதிபராசக்தி நகர், கதிர்வேல் நகர், முத்தமாள் காலனி, கதிரேசன் நகர், போல் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நேரானது சுமார் மூன்று அடி முதல் எட்டு அடி வரை தேங்கியுள்ளது.
இதன் காரணமாகப் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழ்நிலையில், வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில், “பொதுமக்கள் வந்து தங்குவதற்காக 17 இடங்களில் புகலிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்குத் தேவையான குடிநீர், ரொட்டி போன்ற வசதிகள் தற்காலிகமாகச் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் விருப்பப்பட்டால் அந்த புகலிடங்களில் தங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் விருப்பப்பட்ட தங்களுடைய உறவினர் வீடுகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.