தமிழகத்தில், சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றிருக்கும் திரைப்படம் கர்ணன். இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்த திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் குறிப்பிட்ட சமுதாயத்தினர் கர்ணன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரி நெல்லை மண்டல காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தது இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இருப்பினும் அனைத்து தடைகளையும் மீறி கர்ணன் திரைப்படம் கடந்த சில நாள்களுக்கு முன்பாக திரையிடப்பட்டது.
1995ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைக்கதையும் , சமூகத்தில் அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன என்பதையும் முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்ட கதையோட்டம் இத்திரைப்படத்தின் வெற்றிக்கும், குறிப்பிடப்பட்ட ஆண்டு சர்ச்சைக்கும் காரணம் என சொல்லப்படுகிறது.
கர்ணன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், கதையோட்டம் என அனைத்தும் மக்களின் இயல்பு வாழ்வியலோடு ஒன்றிணைந்த நிகழ்வாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 90-களில் தென் தமிழகத்தில் நிலவிய ஆதிக்க சாதி தீண்டாமைகள் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை சொல்லும் விதமாக திரைப்படம் வெளிவந்துள்ளது. எனவே, உண்மை சம்பவத்தோடு தொடர்புடைய திரைப்படம் என்பதால் 2.30 மணிநேர திரைக்கதை என்பதையும் தாண்டி களத்தில் நடந்த நிஜ கூறுகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
கொடியங்குளம் கலவரம் முதல் விதை எங்கு எப்போது?
1995 ஜூலை 26...
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி - சுரண்டை பேருந்தை ஓட்டுநர் தங்கவேலு (வயது 53) ஓட்டிவந்தார். அப்போது சாலையில் வழிவிடாமல் சென்ற மாணவர்களிடம் வழிவிடுமாறு தங்கவேலு கூற அது வாக்குவாதமாக முற்றி மோதல் உருவாகியது. சுரண்டையில் இருந்து புளியங்குடிக்கு பேருந்து திரும்பி வரும்போது வீரசிகாமணி என்ற இடத்தில் நடுவக்குறிச்சி கிராமத்தின் மாணவர்களும், இளைஞர்களும் சேர்ந்து பேருந்தை மறித்து ஓட்டுநர், நடத்துநர் இருவரையும் தாக்கினர். இதில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். ஓட்டுநர் தங்கவேலு நடுவக்குறிச்சி கிராமத்தின் அருகிலுள்ள வடநத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஓட்டுநர் தங்கவேலு தாக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு வடநத்தம்பட்டியைச் சேர்ந்தவர்கள் வீரசிகாமணி பகுதிக்கு திரண்டு வந்தனர். வீரசிகாமணியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கிருந்த ஒரு சமுதாயத்தின் தலைவர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. சங்கரன்கோவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சின்னையன் தலைமையிலான காவல் துறையினர் வடநத்தம்பட்டி கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதாக நடுவக்குறிச்சி கிராமத்தின் 15 பேர் மீதும், வீரசிகாமணி சிலை சேதம், கத்திக் குத்து சம்பவத்திற்காக வடநத்தம்பட்டி கிராமத்தின் 18 பேர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த சம்பவங்கள் 1995 தென் மாவட்ட சாதி மோதலின் முதல் விதையாக விழுந்தது.
சமாதான பேச்சுவார்த்தைதான் ஆனாலும்
வீரசிகாமணியில் சிலையை சேதப்படுத்தியவர்களைக் கைது செய்யக்கோரி நடந்த போராட்டங்களால் அடுத்த மூன்று நாட்களுக்கு தென் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் கடைகள் திறக்கப்படவேயில்லை. 1995 ஜூலை 29 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.கே. ஜெயக்கொடி தலைமையில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
தங்கள் கிராமத்தில் தாக்குதல் நடைபெற்றதாலும், சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் பலர் துன்புறுத்தப்படுவதாகவும் கூறி ஒரு தரப்பினர் கூட்டத்தைப் புறக்கணித்தனர். மற்றொரு தரப்பினரின் கோரிக்கை ஏற்கப்பட்டு சிலையை அரசு தரப்பில் சீரமைத்து தருவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் தெரிவித்தார். ஆனால், சமாதான பேச்சுவார்த்தையை மீறி 1995 ஜூலை 30 மறுநாளும் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு தரப்பினர் பேருந்துகளை இயங்கவிடவில்லை.
இதுகுறித்து காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழ்நாடு அரசோ எதையுமே கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சிலை அவமதிப்பைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஜூலை 31 அன்று திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகே ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இறந்தவரின் தரப்பினர் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் புகுந்து எதிர் தரப்பினரின் கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரவிய கலவரம்
திருநெல்வேலியில் கடைகள் நொறுக்கப்பட்டதைக் கண்டித்து தென்காசியில் பேருந்துகள் மறிக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்றது. சிவகிரி பகுதியில் ஒரு சமுதாயத்தின் தலைவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. சிவகிரியில் தலைவர் சிலை சேதத்திற்கு காரணமென்று கூறி எதிர்தரப்பின் மூவர் மீது தாக்குதல் நடந்தது. தங்கள் தரப்பினரைத் தாக்கியதைக் கண்டித்து வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ.வின் மண்ணெண்ணெய் குடோன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
ஜூலை 30ஆம் தேதி சிவகிரியில் நடந்த காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏழு பேர் காயமுற்றனர். மேலும், பாவூர்சத்திரம் பகுதியில் ஒரு தலைவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, வெள்ளாளங்கோட்டை பகுதியில் பலர் மீது தாக்குதல் நடைபெற்றது. பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.
பரவிய மோச தீ
1995 ஆகஸ்ட் 5 அன்று கயத்தாறு தாக்குதலைக் கண்டித்து புளியம்பட்டியில் ஒரு வீடும், சீவலப்பேரி பகுதியில் ஒரு வீடும் எதிர் தரப்பினரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சீவலப்பேரி பகுதியில் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக திருவைகுண்டம் பகுதியில் ஆகஸ்ட் 25 அன்று பலவேசம் என்பவர் உயிரோடு தீ வைத்துக் கொல்லப்பட்டார். அவரது மனைவி உயிர் தப்பினார். பல இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. வாகனங்கள், கடைகள் தாக்கப்பட்டன. பலவேசம் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, ஆகஸ்ட் 25இல் சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் ஒரு தரப்பினர் மீது தாக்குதல் நடைபெற்றது. காவல் துறை துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது.
சிங்கத்தாக்குறிச்சி சம்பவத்திற்கு பதிலடியாக முறப்பநாடு அருகே பக்கபட்டி கிராமத்தில் வாழை மரங்கள் முற்றிலும் வெட்டி சாய்க்கப்பட்டன. நாணல்காடு கிராமத்தில் குறைந்த அளவே வாழ்ந்து வந்த ஒரு தரப்பினரின் வீடுகள் சூறையாடப்பட்டு, அடித்து விரட்டப்பட்டனர். அதேபோல், பக்கபட்டி, நாணல்காடு சம்பவத்திற்கு பதிலடியாக நாரைக்கிணறு பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார். வெள்ளத்துரை கொலைக்குப் பதில் என்று தாழையூத்து ரயில் நிலையம் அருகே எதிர் தரப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.
கொடியங்குளம் கலவரம்