பேருந்து வசதி வேண்டி கிழவிப்பட்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் தூத்துக்குடி:கிழவிப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து மற்றும் மினி பஸ்களை இயக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஈடுபட்டது. மேலும் திடீர் சாலை மறியலில் கிராம மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிழவிப்பட்டி கிராமத்திற்கு, காலை, மாலை என முன்னதாக நான்கு முறை கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது. அரசு பேருந்து மட்டுமல்லாமல் இக்கிராமத்திற்கு மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு பேருந்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 17ஆம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக இக்கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளதாக கிழவிப்பட்டி கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும், கனமழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளதால் பஸ்கள் இயக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இக்கிராம மக்கள், தொழிலாளர்கள் வேலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமலும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கிழவிப்பட்டி கிராம மக்கள் கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். மேலும், சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையும் படிங்க:திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்த தொழிற்சங்கங்கள்.. அமைச்சர் சிவசங்கர் ரியாக்ஷன் என்ன?