தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் முத்துராஜ் - ராஜேஸ்வரி தம்பதி. இவர்கள் கடந்த அக்.5-ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தங்களது ஒன்றரை வயது மகனுடன் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அங்கு வைத்து அவர்களது ஒன்றரை வயது குழந்தை காணாமல் போனது. பின்னர், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒரு பெண் அந்த குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. பின்னர், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைத்து குழந்தையைத் தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர், அந்த பெண் சேலத்தில் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்படி, காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அப்பெண் திலகவதி மற்றும் கணவர் பாண்டியன் ஆகியோர் சேர்ந்து குழந்தை கடத்தியது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணைக்காக இருவரையும் காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு விசாரணையின்போது கழிவறைக்குச் சென்ற திலகவதி அங்கு மயங்கிவிழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அவரது கணவர் பாண்டியனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.