தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அருள்மிகு முத்துக் கிருஷ்ணேஸ்வரர் திரு நீலகண்டேஸ்வரர் கோயிலில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பழுது பார்த்து புதுப்பித்தல் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் தலைமை வகித்தார். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரஞ்சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் உள்ள தொன்மையான அருள்மிகு முத்துக் கிருஷ்ணேஸ்வரர் திரு நீலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தை புனரமைத்து புதுப்பித்தல் பணிக்கு 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், திருக்கோயில் பிரகார மண்டபம், மடப்பள்ளி மேல்தளம் பழுது பார்த்தல் பணிக்கு ரூ. 17 லட்சம், திருக்கோயில் சன்னதிகள், மண்டபங்கள் கருங்கல் சுவர்கள் பழுது பார்த்து சீரமைத்தல் பணிக்கு ரூபாய் 7 லட்சத்து 37 ஆயிரம், திருக்கோயில்கள் மண்டபங்களில் தற்போது உள்ள கல் தளத்தை சீரமைத்தல் பணிக்கு ரூபாய் 7 லட்சத்து 40 ஆயிரம், மதில் சுவர்கள் பழுதுபார்த்தல் பணிக்கு ரூபாய் 2 லட்சத்து 92 ஆயிரம், சன்னதிகள், கல் மண்டபங்கள் தண்ணீர் மூலம் சுத்தம் செய்தல் பணிக்கு ரூபாய் 1 லட்சத்து 90 ஆயிரம் என மொத்தம் 1 கோடியே 34 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முத்துக் கிருஷ்ணேஸ்வரர் கோயிலில் பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முழுமையாக நடைபெற்று முடிந்ததும் குடமுழுக்கு பெருவிழா நடைபெறும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க... நடிகர்கள் சம்பள விவகாரத்தில் அரசு தலையிட முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜு