தூத்துக்குடி: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காயாமொழி கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முரளிமனோகர், முகமது அன்வர் உசேன், பொன் ரத்தின செல்வன், ராஜேஸ்வரன் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி நடந்தது. அதில் அதிகபட்சமாக ராஜேந்திரன் 1,071 வாக்குகளும், முரளிமனோகர் 1,070 வாக்குகளும் பெற்றனர். ராஜேந்திரன் 1 வாக்கு அதிகம் பெற்றதால், தேர்தல் அதிகாரி அவர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
இதையடுத்து முரளிமனோகர் தரப்பில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் தீர்ப்பு வழங்கினார்.