தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த கள்ளர் வெட்டுத் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, புனித மணலை எடுத்துச் செல்வது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அய்யனாா் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, கள்ளர் வெட்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்வு, கோயில் பின்புறமுள்ள தேரிப் பகுதியில் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் கடைகளில் திருடி தொல்லை கொடுத்து வரும் கள்ளர்களை தண்டிக்கும் விதமாக, அய்யனார் அருள் வந்து இளநீரை கள்ளராக பாவித்து இளநீர் வெட்டப்பட்டது.