தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை தமிழ்நாட்டிலே முதல்முறையாக தொகுதி மக்கள் நலன்கருதி கரோனா சிகிச்சை மையத்திற்காக விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் வழங்கினார். இதனை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.
பின்னர், அங்கு கரோனா தடுப்பூசி செலுத்தம் பணியை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் கனிமொழி வழங்கினார். தொடர்ந்து இசைமேதை நல்லப்ப சுவாமிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மாரியாதை செய்தார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளடங்கிய கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
விளாத்திக்குளம் எம்.எல்.ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன், "தமிழ்நாட்டில் முதல் முறையாக கரோனா காலகட்டத்தில் தொகுதி மக்கள் பயன்படும் வகையிலும், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள இடப்பற்றாக்குறையை கருத்தில்கொண்டும் எனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை கரோனா சிகிச்சை மையத்திற்காக வழங்கியுள்ளேன்" என்றார்.