தூத்துக்குடிமாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், ஸ்ரீமதி. தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவரான இவர், மாவட்ட மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில், மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அப்போட்டியில் கலந்து கொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு அவரிடம் போதுமான வசதியில்லாத காரணத்தால் அந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத்தலைவருமான கனிமொழியிடம், தனக்கு சைக்கிள் வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, புதிய சைக்கிள் ஒன்றை கனிமொழி எம்பி வழங்கினார்.
இந்த சைக்கிளின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு, குழு போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தனித்துப் போட்டியிட்டதில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியில் 3 ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.