தூத்துக்குடி: உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் அறிவித்ததற்காகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலவாரியங்களில் நலத்திட்ட உதவிகளை உயர்த்தி அறிவித்ததற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், தொழிலாளர் நல வாரியங்களை பாதுகாக்க கோரியும் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் நேற்று (நவ.6) கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு, அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் மாநில இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக துணை நிற்கும்
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி, "உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன்பேரில், திமுக அரசு அதை நிறைவேற்றியுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உள்ள பிரச்னைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக தீர்த்து வைக்கப்படும்.
கருத்தரங்கில் உரையாற்றிய கனிமொழி எம்பி ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொகுப்பு சட்டத்தினால் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மாநிலத்தின் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. இதை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக திமுக குரல் கொடுக்கும். அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குரல் அற்றவர்களுக்கு திமுக ஆட்சி ஒரு குரலாக, ஒரு முகமாக, ஒரு தோழனாக உறுதுணையாக நின்று உரிமைகளை பெற்றுத்தர துணை நிற்கும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கீதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: காந்திஜி குடை, நேதாஜியின் நாற்காலி - 'விடுதலைப் போரில் தமிழகம்' கண்காட்சியைக் காண மக்கள் ஆர்வம்!