கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தேர்தல் அலுவலருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தேர்தல் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 10 பேரும், அதிமுக கூட்டணியைச் சேர்ந்த 9 பேரும் வாக்களித்தனர்.
திமுக சார்பில் பூமாரியும், அதிமுக சார்பில் கஸ்தூரியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். மொத்தமுள்ள 19 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில், 9 திமுக வார்டு கவுன்சிலர்கள், 6 அதிமுக கவுன்சிலர்கள், நான்கு சுயேட்சைகள் வாக்களித்தனர்.
இதில் யாரும் எதிர்பாராத விதமாக தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் அரங்குக்குள் சலசலப்பு ஏற்பட்டது. திமுக தரப்பினர் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையின் மூலம் வெளியேற்ற தேர்தல் அலுவலர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.