விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் பாதிக்கும் வகையில் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரியும், மத்திய அரசுக்குத் துணைபோகும் அதிமுக அரசைக் கண்டித்தும், திமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் தூத்துக்குடியில் திமுக சார்பில் நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஜீவன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.