தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளத்தினை 5 கோடி ரூபாய் மதிப்பில் ஆழப்படுத்தும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று (ஜன. 23) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
9 ஆயிரம் குடும்பங்கள் பயன்
தொடர்ந்து துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணியை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதா ஜீவன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் கனிமொழி எம்.பி., பேசுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பினருக்குமான அரசாக விளங்குகிறது.
விவசாய நலனுக்கெதிரான போராட்டத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து திமுகவின் குரல் ஓங்கி ஒலித்தது. ரூ.5 கோடியில் செலவில் துறைமுகத்தைத் தூர்வாரும் இந்தப் பணிகளின் மூலம் 9 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும்.
திட்டப் பணியைத் தொடங்கி வைத்துப் பேசிய கனிமொழி தூத்துக்குடி துறைமுகத்தில் கூடுதலாக படகுகளை நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்தித் தரும் பொருட்டு ஆய்வுப் பணிகளுக்காக ரூ.1கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பருவநிலைகளிலும் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்திக்கும் மீனவர்களுக்கு திமுக அரசு என்றும் துணையாக இருக்கும்' என்றார்.
துறைமுக விரிவாக்கம் ஆய்வு
இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தூத்துக்குடி, குளச்சல் மீன்பிடி துறைமுகங்கள் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதற்கான ஆய்வுகள் விரைவில் நடைபெறும்.
மீன்பிடித் தடை காலம் நிவாரணம் 5 ஆயிரம் ரூபாயை, 6 ஆயிரம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. அதனை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வாணியம்பாடி, உவரி, ராமேஸ்வரம், பழவேற்காடு ஆகியப் பகுதிகளில் புதிதாக மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன’ என்றார்.
இதையும் படிங்க:ரூ.662.22 கோடி நகராட்சி நிர்வாக திட்டங்கள் தொடக்கம்!