தூத்துக்குடி:அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. நடப்பாண்டு கந்த சஷ்டி திருவிழா, இன்று (அக் 25) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாக சாலை மண்டபத்தில் எழுந்தருளினார்.
அதன்பின் யாக சாலை பூஜை தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து திருச்செந்தூர் கோயிலுக்கு அருகே உள்ள கடலில் புனித நீராடி, அங்க பிரதட்சணம் செய்து தங்கள் விரதத்தைத் தொடங்கினர்.
தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதால், பக்தர்களின் வசதிக்காக கோயிலின் 18 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு, குடிநீர் மற்றும் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.