திருச்செந்தூர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் தூத்துக்குடி: முருப்பெருமானின் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த 13ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடம் வெகுவிமர்சையாக தொடங்கப்பட்டது.
அதனைத் 7ஆம் திருநாளான நேற்று (நவ.19) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இந்த திருக்கல்யாண விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசுவரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
பின்னர் காலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகே உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில், சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோயிலில் இருந்து எழுந்தருளி, சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டத்துக்கு வந்தார்.
அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தெற்கு ரத வீதி, மேல ரதவீதி சந்திப்புக்கு சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் வந்தனர். அங்கு தெற்கு ரத வீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்தார். பின்னர் சுவாமி, அம்பாள் மாலை மாற்று நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கு பட்டாடைகள் மற்றும் மாலைகள் மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது. மாலை மாற்று விழா முடிந்ததும், சுவாமியும், அம்பாளும் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளிலும் உலா வந்து சன்னதி தெரு வழியாக கோயிலை சென்றனர். பின்னர் இரவு ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீகமுறைப்படி வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: சிம்ம மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா!