தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் உள்ள முருகன் கோயில்களில் மிகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி குடைவரை திருக்கோயிலும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் எந்த ஒரு முருக தளங்களில் நிகழாத சிறப்பு அம்சமான மலர்க் காவடி விழா நடைபெற்று வருகின்றது. இந்த மலர் காவடி விழா முருக பக்தர்கள் சார்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மலர் காவடி உலாவை முன்னிட்டு கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் இன்று (ஜன.08) காலை நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மலர்க் காவடி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மலர்க் காவடி நிகழ்ச்சிக்கு மாநில முருக பக்தர்கள் பேரவையைத் தோற்றுவித்த பேரூராதீனம் கயிலைக்குருமணி திருப்பெருந்திருசாந்தலிங்க இராமசாமி அடிகளார் தலைமையில் மலர் காவடி ஊர்வலம் தொடங்கியது.