தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கம்மவார் சங்கம் (லண்டன்) சார்பாக ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர், அதிமுக சட்டப்பேரவை பொருளாளர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு ஆக்சிஜன் சிலிண்டர், செறிவூட்டிகளை மருத்துவர்களிடம் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் , “தமிழ்நாடு அரசு கரோனாவை கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கூட பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் தங்களால் முடிந்தளவு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து சசிகலா ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக கட்சியைப் பற்றி விமர்சிப்பவர்கள் ஒரு தொண்டனாக இருக்க வேண்டும். சசிகலா, அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் கூறும் செயலுக்கும், சொல்லுக்கும் பதில் கூறுவது சரியுமில்லை, தேவையுமில்லை” என்று தெரிவித்தார்.