தூத்துக்குடி :சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை நாளை (செப்.24) முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று (செப். 22) வெற்றிகரமாக நிறைவடைந்தது. மேலும், வந்தே பாரத் ரயில் சேவை பண்டிகை காலங்களில் அதிகம் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த ரயில் விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய மாவட்டங்களில் நின்று செல்லும் வந்தே பாரத் தென்னக ரயில்வேக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் கோவில்பட்டியில் நின்று செல்லாதது தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆகையால் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தி செல்ல வலியுறுத்தி கோவில்பட்டி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை நேரடியாக சந்தித்து மனு அளித்தார். பின்னர் அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ரயில்வே அதிகாரி ஆர்.என். சிங் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்ய சபா எம்பியுமான வைகோ மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் கோவில்பட்டி ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: அப்படி என்ன வசதி இருக்கு சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயிலில்?