தூத்துக்குடி:கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி கடம்பூர் முதல் நிலை பேரூராட்சிக்கான 9 வார்டுகளில் மட்டும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று (செப் 29) கடம்பூர் பேரூராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 1,185 ஆண் வாக்காளர்கள், 1,285 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,470 வாக்காளர்கள் உள்ளனர். 1வது வார்டில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, 2 வது வார்டில் ராஜேஸ்வரி, 11வது வார்டில் சிவகுமார் ஆகியோர் சுயேச்சையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.