தூத்துக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை காவலர்களால் நடத்தப்பட்டது என்பதில் மாற்று கருத்து கிடையாது.
கொல்லப்பட்ட வியாபாரிகள் எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாதவர்கள். எனவே அவர்களுடைய மரணத்திற்கு நீதி வேண்டும் என்பது ஒரு சமூக நாகரிகத்தின் கோரிக்கையாகும்.
கொலைசெய்யப்பட்ட வியாபாரிகளின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்கும். கொலைசெய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்காலிகமாக பணி நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அது தவறான செயல். ஒரு சாதாரண குற்றச் செயலுக்குக்கூட குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நாம் கைதுசெய்திருக்கிறோம்.
ஆனால் இவர்கள் விஷயத்தில் சமூகமே அவர்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்கிறபோது சம்பந்தப்பட்ட காவலர்களைத் தமிழ்நாடு அரசு கைதுசெய்யவில்லை. இந்தச் சம்பவம் நடைபெற்ற உடனே இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.
அந்த கோரிக்கை வலுப்பெற்றதன் மூலமாக உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு அதன் பிறகு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாகச் சொல்கிறார்கள். இது ஒரு தந்திரமான, புத்திசாலித்தனமான வேலையாகும். விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதற்கும், நீதிமன்றத்திற்கும் சம்பந்தமில்லை. ஒரு முதலமைச்சர் நினைத்தால் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றலாம். விசாரணையை காலம் தாழ்த்துவதற்கான முயற்சியே இது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் காவல் துறைத் தலைமைக்கும், தமிழ்நாடு அரசின் தலைமைக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது குற்றவாளிகளுக்கு துணை போகாதீர்கள் என்பதுதான். காவல் துறையில் இருக்கும் ஒருசில கறுப்பு ஆடுகளுக்காக மற்றவர்கள் ஏன் சேற்றை வாரிப் பூசிக் கொள்ள வேண்டும். எனவே தவறு செய்தவர்களை அப்புறப்படுத்துங்கள், அவர்களைக் கைது செய்யுங்கள்.